சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் சந்திரயான்3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் ஆகியோர் தலைமையில் பல பொறியாளர்கள் இதற்காக பெரும் பணியாற்றினர். அவர்களது கூட்டு முயற்சியால் இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு சந்திரயான் 3 ல் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் நிலவின் தென் தெருவத்தில் மெதுவாக தரையிறக்கப்பட்டது.இதனை மாலை 5.44 மணி முதல் இஸ்ரோ நேரடியாக ஒளிபரப்பியது. ஆரம்பம் முதலே
இந்திய மக்கள் திக் திக் பதற்றத்துடன் இதனை பார்த்தனர். உலகம் முழுவதும் உள்ள மக்களளும், இதனை கண்டுகளித்தனர்.
அந்த லேண்டரின் இரு கால்களில் ஒன்றின் இந்திய தேசிய கொடியில் உள்ள அசோக சக்கரம் சின்னமும், இன்னொரு காலில் இஸ்ரோ சின்னமும் பொறிக்கப்பட்டு இருந்தது. வெற்றிகரமாக லேண்டர் தரையிறங்கியதும் ஒட்டுமொத்த இந்தியர்களும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இஸ்ரோவில் இதனை நொடிக்கு நொடி கண்காணித்து அதனை சரியாக இயக்கிய விஞ்ஞானிகளும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொணடனர். இஸ்ரோ தலைவர் சோம்நாத், திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் ஆகியோருக்கு பாராட்டுக்கள் ,வாழ்த்துக்கள் குவிந்தன. உலகின் அத்தனை நாட்டு விஞ்ஞானிகளும் இதனை உற்று நோக்கியபடி இருந்தனர். அவர்களும் இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வுக்காக இஸ்ரோவுடன் தென்னாப்பிரிக்காவில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி இணைந்து, நிலவில் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இன்று சந்திரயான் 3 நிலவில் இறங்கியதை தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு பிறகு, நிலவுக்கு சென்ற 4வது நாடாக இந்தியா தன்னை பிரகடனப்படுத்தியது. அதிலும் குறிப்பாக இதுவரை எந்த நாடும் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதில்லை. இந்தியா முதன்முதலாக தென் துருவத்தில் தரையிறங்கி சாதனை புரிந்துள்ளது. இந்தியா நிலவில் தரை இறங்கியதையடுத்து பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பல நகரங்களில் மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மோடி பேசியதாவது.. ஒய்வின்றி விஞ்ஞானிகள் உழைத்து தற்போது பலன் கிடைத்துள்ளது. புதிய ஆற்றலும் நம்பிக்கையும் பிறந்துள்ளது. வரலாறு சாதனை செய்துள்ளது. அடுத்ததாக சூரியனை நோக்கி செல்ல உள்ளது இஸ்ரோ வின்கலம். என்று தெரிவித்தார்.