Skip to content
Home » காவிரி வழக்கு … உச்சநீதிமன்றம் 25ம் தேதி விசாரணை

காவிரி வழக்கு … உச்சநீதிமன்றம் 25ம் தேதி விசாரணை

  • by Senthil

காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடக அரசு திறக்கவில்லை.  இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது. டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டன.  தமிழகத்திற்கு மாதந்தோறும் தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தராததால் தமிழக அரசு மத்திய  நீர்வளத்துறையில் பல முறை  புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில்  தமிழக அரசின் சார்பில் வக்கீல்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர்  காவிரி நீரை திறக்க உத்தரவிட வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.  அதில், ஆகஸ்டு மாதத்துக்கான எஞ்சியுள்ள நாள்களுக்குத் தேவையான  நீரை உடனடியாக திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல செம்டம்பர் மாதம் திறந்துவிட வேண்டிய 36.76 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு திறப்பதை உறுதிசெய்ய வேண்டும். எஞ்சியிருக்கும் காலத்துக்கு தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய நீர் குறித்த உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்துவதை உறுதிசெய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி கடந்த வெள்ளிக்கிழமை முறையிட்டார்.  முறையீட்டு பட்டியலில் இல்லாததால், முறைப்படி பட்டியலில் இடம்பெறச் செய்து திங்கட்கிழமை மீண்டும் முறையிட தமிழ்நாடு அரசை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.

அதன்படி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன் தமிழ்நாடு அரசின் சார்பில் நேற்று முன்தினம் ஆஜரான வக்கீல் முகுல் ரோத்தகி, தமிழ்நாடு அரசின் மனு அவசரமாக விசாரிக்க வேண்டும். இது தொடர்பான மனுக்களை விசாரித்த நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் ஓய்வுபெற்று விட்டதால் புதிய அமர்வை ஏற்படுத்த வேண்டும் என முறையிட்டார். முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி, புதிய அமர்வு அமைக்கப்படும் என தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து கர்நாடகா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஷியாம் திவான், மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கோர்ட்டு அவமதிப்பு வழக்கையும் அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். புதிய அமர்வு இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்கும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.  இதன்படி, காவிரியிலிருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரும் தமிழ்நாடு அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பிரசாந்த்குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரிக்கும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!