திமுக முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் கரூர் வெங்கமேடு பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரும்,கரூர் மாவட்ட திமுக செயலாளருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பெரியார், அண்ணா, கலைஞர் காட்டிய வழியில் தமிழக முதல்வர் திட்டங்களை வழங்கி வருகிறார். பேராசிரியர் வழியில் ஆட்சி நடத்துகிறார். கொரோனோ காலத்தில் வீடுகளில் பொதுமக்கள் முடங்கிக் கிடந்த போது, அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் 1000 ரூபாய் தான் கொடுத்தார்கள். 5000 ரூபாயாக உயர்த்தி தர ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அவர்கள் கொடுக்க மறுத்த 4000 ரூபாயை முதல்வரான உடனே நமது முதல்வர் ஸ்டாலின் கொடுத்தார்.
மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தை அறிவித்து, முதல்வரான பிறகு 2வது திட்டமாக அத்திட்டத்திற்கு கையெழுத்திட்டு அமல்படுத்தினார்.
கரூர் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, மாநகராட்சியாக தரம் உயர்த்தினார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும்.
கரூர் மாவட்டத்திற்கு 87 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக பெற திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திற்கு 3500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை முதல்வர் வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் 68,036பூத்கள் உள்ளது. அந்த கட்சியில் உள்ள மாநில பொறுப்பாளர் சொல்கிறார் 66,000 பூத் இருக்கின்றது என்று சொல்கிறார் எவ்வளவு பூத்திருக்கிறது என்று கூட தெரியவில்லை அவர் எப்படி தேர்தல் களத்தை சந்திக்க போகிறார், இல்லாத ஒரு ஆளை பற்றி இல்லாத கட்சியை பற்றி ஏன் நாம் விளம்பரம் தேடி தர வேண்டும் நமக்கு அடுத்த வேலை இருக்கு. நாடாளுமன்ற தேர்தலில் நாம் பணியை ஆரம்பிக்க வேண்டும்.
மத்திய அரசு பொறுப்பேற்று 400 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலையை தற்போது 1200 ரூபாயாக ஆக்கிவிட்டது. மானியம் தருவதாக கூறினார்கள். தர மறுக்கிறார்கள்.
மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக பொங்கலுக்கு, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கரும்பும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். யார் கோரிக்கை வைத்தாலும், அந்த கோரிக்கையை ஏற்று திட்டங்களை செயல்படுத்துகிறார் முதல்வர். அவரது திட்டங்களை தமிழகம் முழுவதும் எடுத்துச் சென்று செயல்படுத்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார்.
முதல்வர் கரத்தை வலுப்படுத்தும் விதமாக நாடாளுமன்ற தேர்தலில் 39க்கு 39 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும் அந்த 39 தொகுதிகளில் கரூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் இவ்வாறு பேசியதும் கூட்டத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், திமுக பொறுப்பாளர்கள், மண்டல குழு தலைவர்கள், மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.