திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாட்டில் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்ததை அடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மாலையில் வளநாடு ஜமாத் நிர்வாகத்தின் சார்பில் இஸ்லாமியர்கள் கோவிலுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக வாழைப்பழம், தேங்காய், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுழை உள்ளிட்ட பழங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்கள் தட்டில் வைக்கப்பட்டு வளநாடு பள்ளிவாசலில் இருந்து இஸ்லாமியர்கள் ஊர்வலமாக வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் கோவிலுக்குள் சீர்வரிசை பொருட்களை கோவில் நிர்வாகிகளிடம்
வழங்கினர், அதை பெற்றுக் கொண்ட கோவில் நிர்வாகிகள், சீர்வரிசை கொடுத்த இஸ்லாமியர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். சீர்வரிசை வழங்கப்பட்ட பின்னர் வெங்கடேச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். மதங்களை கடந்த மனிதத்தின் வெளிப்பாடாக பெருமாள் கோவிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கிய நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மத நல்லிணக்கத்தில் தமிழ்நாடு எப்போதும் முன்னுதாரணமாக இருக்கிறது என அனைவரும் பாராட்டினர்.