அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நேற்று மதுரை அருகே வலையங்குளத்தில் நடைபெற்றது. இதற்காக ரயில், பஸ், வேன், கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அக்கட்சித் தொண்டர்கள் மதுரையில் குவிந்தனர். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு முகப்பில், கட்சி துவங்கி 51 ஆண்டுகள் ஆனதை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டிருந்த 51 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியேற்றினார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து ஒரு டன் அளவிற்கான ரோஜா பூக்கள் மும்முறை தூவப்பட்டன. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பேசினர். இந்த மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, “புரட்சித் தமிழர்” என்ற புதிய பட்டம் சூட்டப்பட்டது. அதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு “புரட்சித் தலைவர்” என்ற பெயரும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு “புரட்சித் தலைவி” என்று பட்டம் இருப்பதைபோன்று எடப்பாடிக்கு புரட்சித் தமிழர் என்கிற பட்டம் வழங்கப்பட்டதாக நிர்வாகிகள் கூறினர். இந்த நிலையில் நடிகர் சத்யராஜிக்கு ஏற்கனவே இந்த பட்டம் கொடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. நடிகர் சத்யராஜூக்கு “புரட்சித் தமிழன்” என்று தான் பட்டம் உள்ளது. ஆனால் எடப்பாடிக்கு தமிழன் என்பதை மாற்றி தமிழர் என்று “புரட்சித் தமிழர்” என்று பட்டம் கொடுத்து இருக்கிறோம் என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்..