திருச்சி தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்:-
நானும் ஓ.பி.எஸ் இணைந்து இனி வரும் காலங்களில் அரசியலில் பயணிப்போம்.
பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க இருக்கும் பட்சத்தில் அந்த கூட்டணியில் அ.ம.மு.க இணையுமா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம்.
சசிகலா தொண்டர்களுக்கு புதிய விடியல் ஏற்படும் என கடிதம் எழுதி உள்ளது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமியின் தவறான ஆட்சி முறையால் மக்கள் கொதிப்படைந்து எதிர்ப்பை காட்ட
2019 ஆம் ஆண்டும், 2021 ஆம் ஆண்டும் தி.மு.க விற்கு வாக்களித்தார்கள்.
ஆனால் இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் ஸ்டாலின் தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார். அதனால் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தி.மு.க வை எதிர்த்து மக்கள் வாக்களிக்கும் தேர்தல். அந்த தேர்தலில் தி.மு.க வையும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் எதிராக மக்கள் அ.ம.மு.க விற்கு ஆதரவளிப்பார்கள்.
ஒரே கையெழுத்தில் நீட்டை ரத்து செய்வோம் என மக்களை ஏமாற்றும் விதமாக தி.மு.க தேர்தல் வாக்குறுதி அளித்தார்கள். 2021 ஆம் ஆண்டு இருந்த நிலையில் எந்த வாக்குறுதி அளிக்காவிட்டாலும் தி.மு.க ஆட்சிக்கு வந்திருப்பார்கள். ஆனால் தி.மு.க வின் குணாதிசயமே மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவது தான். அவர்களின் தவறான நடவடிக்கையால் தி.மு.க தீய சக்தி என்பது தெரிகிறது.
தி.மு.க ஆட்சிக்கு வரும் பொழுதெல்லாம் கர்நாடக அரசுக்கு தைரியம் வந்து விடும். தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்க பார்ப்பார்கள். காவேரி விவகாரத்தில் மத்திய அரசு நியாயமான உரிமையை தமிழ்நாட்டிற்கு பெற்று தர வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருந்த காலத்தில் ஈட்டிய செல்வத்தை கொண்டு மக்களையெல்லாம் அள்ளி செல்லலாம் என பார்க்கிறார்கள். 250 கோடிக்கு மேல் மக்களுக்கு பணத்தை வாரி வழங்கும் நல்ல வேலையை செய்கிறார்கள். எல்லா பகுதிகளிலும் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் இன்ன பிற வசதிகளை கொடுத்து மக்களை அழைக்கிறார்கள். ஆனால் மக்கள் செல்வார்களா என தெரியாது.
மக்கள் கூட்டம் தானாக கூடாத வகையில் அந்த மாநாடு வெற்றி தராது.
எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க வை கபளிகரம் செய்துள்ளார்கள். அதை ஜனநாயக முறையில் மீட்க வேண்டும் என்கிற நோக்கில் தான் அ.ம.மு.க உருவாக்கப்பட்டது. நாங்கள் உறுதியாக போராடி அ.தி.மு.க வை ஜனநாயக ரீதியாக மீட்டெடுப்போம்.
அ.ம.மு.க சார்பிலும் மாநாடு நடத்தப்படும். ஆனால் உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைந்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார்கள். அப்பொழுது தெரியும் யார் உண்மையான தொண்டர்கள் என்பது.
2024 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பு அளிப்பார்கள் என்றார்.