அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு காரணமாக மருத்துவர் ஆக முடியாத மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் குழுமூர் கிராமத்திற்கு வந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போதைய முதலமைச்சர் முக ஸ்டாலினும் அனிதாவின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு சுடுகாடு வரை சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதனால் இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் எதிரொலித்தது. அதனை தொடர்ந்து அப்போதைய அரசு இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீது வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்குகள் தற்போது செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கவுதமன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து நீதிபதி ஏக்னஸ் ஜெப கிருபா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தற்போதைய திமுக அரசு தொடர்ந்து நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் பழைய வழக்கில் இயக்குநர் கவுதமனுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உள்ளது நீட் எதிர்ப்பு போராளிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.