கோவை அவினாசி சாலை & அண்ணா சிலை பகுதியை அடுத்துள்ள ஜிடி கார் அருங்காட்சியகம் (“GEDEE MUSEUM”) கடந்த 2015″ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகள், வெளிநாட்டு ரக கார்கள் மட்டும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்திய ரக கார்களுக்கென தனி காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இந்திய ரக கார் காட்சியகத்தில், இந்திய நிறுவனங்கள் தயாரித்த 40க்கும் மேற்பட்ட கார்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பத்மினி, அம்பாசிடர், சிம்பனி நிறுவனத்தின் மூன்று சக்கர கார் என பழமையான கார்கள் முதல் இண்டிகா உள்ளிட்ட 2000″ம் ஆண்டுக்கு முந்தைய கார்கள் முதல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த காட்சியகத்தில் கூடுதல் சிறப்பாக, ஜி.டி நாயுடுவால் தயாரிக்கப்பட்ட கோவை- உடுமலை வழியாக பழநி வரை செல்லும் பெட்ரோல் மற்றும் வாயுவால் இயங்கும் பேருந்து, பெரியார்க்கு நடிகர் எம்.ஆர்.ராதா வழங்கி, பெரியார் ஜி.டி.நாயுடுக்கு வழங்கிய பிரச்சார பேருந்து உட்பட ஜி.டி.நாயுடு தயாரித்த கார்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இந்த போக்குவரத்தின் வரலாற்று குறிப்புகளும், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கார்களின் வரலாறு முழு அம்சங்களும் அறிவிப்பு பலகைகளுடன் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தொலைக்காட்சி வாயிலாக
பழமையான புகைப்படங்களும் காண்பிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இங்கு வெளிநாட்டு ரக பழமையான கார்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியத்திற்கு நுழைவு கட்டணமாக ஒரு நபருக்கு 125 ரூ, குழந்தைகளுக்கு 75 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. குழுவாக(30பேர்) சென்றால் ஒரு நபருக்கு 100 ரூபாயும், அரசு பள்ளி மாணவர்கள் குழுவாக
வரும் போது 500″ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் வாரத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 9 மணி முதல் மாலை 6:30 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.