தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே அரித்துவாரமங்கலம் சாலையில், வடக்குப் பட்டம் கிராமத்தில், அருள்தரும் அனுபம குஜநாயகி அம்பாள் உடனாகிய அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
பிற்கால சோழர் காலம் என்று கருதத் தக்க வகையில் கோயில் கட்டுமானம் அமைந்துள்ளது. பொதுவாக சிவன் கோயில் கருவறையின் வெளிப்பகுதியில் உள்ள கோஷ்டங்களில் தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா ஆகிய மூர்த்திகள் இருக்குமாறு கட்டமைக்கப்பட்டிருக்கும்.
இந்த கோஷ்டங்களில் மூர்த்திகளை தனியே செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.
ஆனால், வடக்குப் பட்டம் அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயிலின் வடக்கு கோஷ்டத்தில் பிரம்மா சிலையை அமர்ந்த கோலத்தில் கட்டுமானத்துடன் இணைத்து மிக நுட்பமான வகையில் புடைப்பு சிற்பமாக யாழிகள் புடை சூழ செதுக்கி அமைத்துள்ளனர். இது குறித்து கும்பகோணம் ஜோதிமலை இறைப் பணி திருக் கூட்டம் நிறுவனர் தவத்திரு திருவடிக் குடில் சுவாமிகள் கூறும் போது…
இது சிக்கனம், கட்டுமான நேர்த்தி, சிற்ப சாஸ்திரங்கள், ஆகம விதிகள் அனைத்தையும் ஒருங்கு சேர்த்து சோழர்கள் பக்தியுடன் செய்த திருப்பணி என்பதற்குச் சான்றாகும். இது போல் அமையப்பெற்ற ஆலயங்கள் அரிது.
ஒன்று தனியே மூர்த்தியை செய்து வைத்திருப்பார்கள். அல்லது அந்த இடம் காலியாக இருக்கும். இது போன்ற ஒரு பாணியின் மதி நுட்பம் நம்மை வியக்க வைக்கிறது என்றார்.