தமிழ்நாடு கவர்னர் ரவி கடந்தவாரம் தனது மாளிகையில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், அவரது பெற்றோரையும் அழைத்து பாராட்டு விழா நடத்தினார். அப்போது சேலம் இரும்பாலை ஊழியர் அம்மாசியப்பன் ராமசாமியும், நீட்டில் வெற்றி பெற்ற தனது மகளுடன் சென்றிருந்தார். அவர் நீட் தேர்வு எப்போது ரத்து செய்யப்படும் என கவர்னரிடம் கேட்டார்.
இந்த கேள்வியை எதிர்பார்க்காத கவர்னர் ரவி, அதிர்ச்சியில் கொந்தளிக்க ஆரம்பித்தார். கேள்விகேட்ட சேலம் அம்மாசியப்பன் ராமசாமியை நோக்கி ஆவேசமாக உட்காருங்கள், உட்காருங்கள் என்றார். அவர் தொடர்ந்து பேசியதால், 2 பெண்கள் வேகமாக வந்து அவர் பேசிக்கொண்டிருந்த மைக்கை பறித்துக்கொண்டு போய் விட்டனர்.
கூட்டம் முடிந்து வெளியே வந்த ராமசாமி, தனது மகள் நீட் தேர்வில் வெற்றி பெற ரூ.20 லட்சம் செலவு செய்து இருக்கிறேன். இந்த அளவு தொகை சாதாரண மக்களால் செலவு செய்ய முடியுமா ? அதனால் தான் நீட் எப்போது ரத்து செய்யப்படும் என கேட்டேன் என்றார். இந்த நிலையில் இன்று சேலம் மாவட்ட பாஜக நிர்வாகிகள் சேலம் இரும்பாலை நிர்வாக இயக்குனரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் அம்மாசியப்பன் ராமசாமி கவர்னரிடம் வாக்குவாதம் செய்தார். எனவே அவரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என அதில் கூறி உள்ளனர்.