மகளிர் உரிமைத்திட்ட சிறப்பு முகாம்கள் விண்ணப்பிக்காதவர்கள் பயன்பெறலாம் என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தஞ்சை மாவட்டத்தில் இன்று 18 ஆம் தேதி, நாளை 19ம் தேதி மற்றும் 20 ஆம் தேதி ஆகிய 3 நாட்கள் மகளிர் உரிமைத் திட்ட சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
மாவட்டத்தில் மகளிர் உரிமைத்திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வது தொடர்பாக நடக்கும் சிறப்பு முகாம்களில் விடுபட்ட விண்ணப்பதாரர்கள் மற்றும் வருவாய்த்துறையின்கீழ் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அந்த குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், முதியோர் ஓய்வூதிய தேசியத்திட்டம், உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன் படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.