அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து முதன்முறையாக மதுரையில் பிரமாண்டமாக அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையன்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இரவு, பகலாக மேடை அலங்காரம் மற்றும் பந்தல் அலங்கார பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மாநாட்டிற்கு விமான நிலைய அதிகாரிகளிடம் உரிய தடையில்லா சான்று பெறவில்லை. ஏராளமானோர் மாநாட்டிற்கு வருவர் என கூறப்பட்டுள்ளதால் விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்படும். மாநாட்டிற்கு வருவோரால் அதிக அளவு போக்குவரத்து இடையூறு ஏற்படும். எனவே அதிமுக மாநாடு நடத்த தடை விதிக்க வேண்டும். மாநாடு நடத்த அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும். என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிமுக மாநாட்டிற்கு தடை கோரிய மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 4 மாதத்திற்கு முன் மாநாட்டிற்கு அறிவிப்பு செய்து விட்டனர்; ஆனால் கடைசி நேரத்தில் தடை கோரினால் எவ்வாறு முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் மதுரையில் அதிமுக மாநாடு நடத்த தடை இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். மதுரை மாநாட்டில் வெடிப்பொருட்களோ, பட்டாசுகளோ வெடிக்க மாட்டோம் என அதிமுக தரப்பு கோர்ட்டில் உறுதி அளித்துள்ளனர்.