திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் .பிரதீப் குமார் தொடங்கி வைத்து, குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். தேசிய குடற்புழு நீக்க முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது :
இம்முகாமில் 1 முதல் 19 வயது வரையிலான அனைத்து ஆண், பெண் குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரையிலான அனைத்து பெண்களுக்கும் (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது. விடுபட்ட நபர்களுக்கு மீண்டும் வருகின்ற 20 ந்தேதி மீண்டும் வழங்கப்படவுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 5,07,869 குழந்தைகளும், நகரப்புறங்களில் 2,70,342 குழந்தைகளும், மொத்தம் 7,78,211 குழந்தைகள் இம்முகாமில் பயனடையவுள்ளார்கள். மேலும் 20 வயது முதல் 30 வயது வரையிலான பெண்கள் கிராமப்புறங்களில் 1,03,912, நகர்ப்புறங்களில் 80,579 என மொத்தம் 1,84,491 பெண்கள் இம்முகாமில் பயனடையவுள்ளார்கள்.
அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மூலம் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் இக்குடற்புழு நீக்க மாத்திரை வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே 1 முதல் 19 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளும் மற்றும் 20 முதல் 30 வரையிலான பெண்களும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் .சௌந்தரபாண்டியன்,சுகாதார துணை இயக்குநர் சுப்பிரமணி, புள்ளம்பாடி தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் .குப்புராஜ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.