நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே நவலடி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பங்கேற்க வந்த பள்ளி சிறுவர்கள் 4 பேர் நேற்று இரவு அருகில் உள்ள கடலில் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது கடல் அலை இழுத்து சென்றதில் ஆகாஷ், ராகுல், முகேஷ் ஆகிய மூவரும் கடலில் மூழ்கியுள்ளனர்.
மீதம் உள்ள ஒரு மாணவன் மட்டும் கரை சேர்ந்துள்ளான். கடலில் இழுத்து செல்லப்பட்ட மீதம் உள்ள சிறுவர்களை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சபாநாயகர் அப்பாவு நேரில் ஆய்வு செய்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்தினார். கடலோர காவல்படையினர் மற்றும் மீனவர்கள் இரவு முழுவதும் தேடிய நிலையில், இன்று காலை 3 சிறுவர்களின் உடல்களும் கரை ஒதுங்கின. இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளை இழந்து வாடும் குடும்பத்திற்கு தனது இரங்கலையும், உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிவாரண தொகையையும் அறிவித்துள்ளார்.