ஆடி அமாவாசையையொட்டி காசிக்கு நிகராக புண்ணியம் தரும் நாகை மாவட்டம் காமேஸ்வரம்(நாகையில் இருந்து வேதாரண்யம் செல்லும் சாலையில் உள்ளது) கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஆயிரக்கணக்கானோர் இன்று கடலில் புனித நீராடினர். ஒவ்வொரு அமாவாசை தினமும் இந்துக்களின் முக்கிய நிகழ்ச்சியாக திகழ்ந்து வருகிறது. இதில் தை மற்றும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை தினம் மிகவும் சிறப்பு பெற்றதாகும். ஆடி அமாவாசையில் விரதமிருந்து மூதாதையர்களுக்கு தர்பணம் செய்தால் அனைத்து ஆசிகளும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். அதன்படி இன்று காமேஸ்வரம் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது
முன்னோர்களுக்கு பிடித்த காய்கறி மற்றும் உணவுகளை படைத்தும், எல்,நவதானியம், பிண்டம் வைத்து பின்னர் திதி கொடுத்து வங்கக்கடலில் புனித நீராடினர். ஒவ்வொரு ஆண்டும் அமாவாசை தினத்தில் காமேஸ்வரம் கடலில் புனித நீராட அதிக அளவு பக்தர்கள் வருவதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி, அங்கு மாவட்ட காவல் துறை, தீயணைப்புத்துறை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் காமேஸ்வரம் மீனவ கிராமம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தன.