மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தி ஏக்நாக் ஷிண்டே அரசியல் அங்கம் வகித்துள்ளார் அஜித் பவார். அம்மாநில துணைமுதல்வராக இருக்கும் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவராருக்கு அண்ணன் மகன் ஆவார். இருவருக்கும் இடையில் அரசியல் மோதல் இருந்து வரும் நிலையில், குடும்ப விசயமாக இருவரும் அடிக்கடி சந்தித்துகொள்கிறார்கள்.
ஏற்கனவே சரத் பவார் மனைவி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில் அஜித் பவார் சரத் பவார் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் சரத் பவாரை அஜித் பவார் ரகசியமாக சென்று சந்தித்தார். இது குடும்ப சந்திப்பு என்று சரத் பவார் தெரிவித்திருந்தார். ஆனால் சரத் பவார் உடன் கூட்டணி வைத்துள்ள உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் இந்த சந்திப்பை விரும்பவில்லை.
சிவசேனா தனது கட்சி பத்திரிகையில் இதுகுறித்து விமர்சனம் செய்திருந்தது. தொடர் சந்திப்பு சரத் பவாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எனக் குறிப்பிட்டிருந்தது. சரத் பவார்- அஜித் பவார் சந்திப்பு மகாராஷ்டிரா அரசியலில் மட்டுமல்ல. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அதிர்வலையை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. ஏனென்றால் இந்த மாத இறுதியில் மகாராஷ்டிராவில் இரண்டு நாட்கள் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணியின் முக்கிய நோக்கமே, பா.ஜனதா தலைமையிலான கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதுதான். மேலும், பொதுத்தேர்தலில் பா.ஜனதா கூட்டணியை தோற்கடித்து கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் முகத்தில் கரியை பூச வேண்டும் என உத்தவ் தாக்கரே நினைக்கிறார். இவ்வாறு இருக்கும்போது பவார்கள் சந்திப்பு கூட்டணி கட்சிகளுக்கு சரியென்று படவில்லை.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டேல், பவார்களின் சந்திப்பு கவலைக்குரிய விசயம் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நானா பட்டேல் கூறியதாவது: இருவரின் சந்திப்பு எங்களை பொறுத்தவரை கவலைக்குரிய விசயம்தான். ரகசிய இடத்தில் நடைபெற்ற இருவருடைய சந்திப்பை நாங்கள் ஏற்கவில்லை. எனினும், இந்த விசயம் குறித்து காங்கிரஸ் தலைமையிடம் விவாதிப்பார்கள். எதிர்க்கட்சி கூட்டணி விவாதிக்கும். ஆகவே, இது குறித்து மேலும் விவாதிப்பது ஏற்புடையதாக இருக்காது. காங்கிரஸ் மக்களவை தேர்தலில் சரத் பவார் கட்சி இல்லாமல் போட்டியிடும் என்பதில் எந்த உண்மையும் இல்லை” என்றார்.