இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை தலைமை செயலகம் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்று விழா நடந்தது. விழாவுக்கு வந்த முதல்வர் ஸ்டாலினை, தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா வரவேற்று, முப்படை தளபதிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோட்டை கொத்தளத்திற்கு சென்று, தேசிய கொடி ஏற்றிவைத்து, தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து காவல்துறை மற்றும் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் பார்வையிட்டார். சுதந்திர தின விழா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்திய ஒன்றியத்தின் முக்கியமான மாநிலம் தமிழ்நாடு. ஒரு கோடி மகளிருக்கு கலைஞர் நூற்றாண்டு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. மாதந்தோறும் 1000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். உயர் கல்வி பயிலும் சுமார் 2 லட்சம் மாணவிகளுக்கு ரூ.350 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில பட்டியலில்க ல்வி சேர்க்கப்பட வேண்டும். அப்படி செய்யப்பட்டால் தான் நீட் போன்ற கொடூர தேர்வுகளை ரத்து செய்ய முடியும். சுதந்திர போராட்ட தியாகிகளை போற்றுவதில் திமுக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல. சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்ப ஓய்வு ஊதியம் 11 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
தியாகிகளுக்கு மணி மண்டபம், இலவச பஸ் பயணம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மொழிப்பற்று, இனப்பற்றுடன் நாட்டுப்பற்றையும் ஒத்த உணர்வுடன் கொண்டவர்கள் தமிழர்கள். இலவச பஸ் பயணம் மூலம் பெண்கள் மாதம் ரூ.850 வரை சேமிக்க முடிகிறது. மகளிர் இலவச பஸ் பயண திட்டம் இனி மகளிர் விடியல் திட்டம் என அழைக்கப்படும். காலை உணவு திட்டம் வரும் 25ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். நாடடின் முன்னேற்றத்தை, பெண்களின் முன்னேற்றத்தை வைத்தே அளவிட முடியும்.
வஉசி , கக்கன், பாரதியார் போன்றவர்களின் புகழை பரப்பும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழ்நாடு தான் விடுதலை போராட்டத்தின் விதையை முதன் முதலில் விதைத்தது. 1947 ஆகஸ்ட் 15ம் தேதி தான் நம் நாடு சுதந்திரம் பெற்றது. அதற்கு முன்னமே ஆடுவோமே, பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று என பாடியவர் மகாகவி பாரதி.
இந்தியா என்பது எல்லைகளால் அல்ல, எண்ணங்களால் வடிவமைக்கப்பட வேண்டும். அனைவரும் விரும்புவது சமத்துவ சகோதரத்துவ இந்தியா. அதன்படிதான் தமிழக ஆட்சி அமைந்து உள்ளது. தமிழகத்தில், ஏற்றத்தாழ்வு அற்ற அரசை நடத்தி வருகிறோம். பரந்து விரிந்த இந்தியாவில் ஒற்றுமையுடன் வாழ்கிறோம். சமூக நீதி, சமத்துவத்தின் அடிப்படையில் தமிழக அரசு நடந்து வலருகிறது. நடப்பாண்டில் பல்வேறு துறைகளில் 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம்.
சென்னை கதீட்ரல் சாலையில் ரூ.25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு விழா பூங்கா அமைக்கப்படும்.இந்தியா முழுவதும் திராவிட மாடல் ஆட்சி பரவினால் மகிழ்ச்சி. வாழ்க தமிழ், வளர்க இந்தியா.
இவ்வாறு அவர் பேசினார். பின்னர் திக தலைவர் கி. வீரமணிக்கு தகைசால் தமிழர் விருதினை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அதைத்தொடர்ந்துதமிழ்ச்செல்விக்கு கல்பனா சாவ்லா வீரதீர செயல் விருது வழங்கினார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜனுக்கு நல்லாளுமை விருதினை வழங்கினார்.பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும் முதல்வர் விருதுகள் வழங்கி முதல்வர் கவுரவித்தார்.