திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் கூட்டம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கடனுதவிகள் வழங்கும் நிகழ்வு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 12 பயனாளிகளுக்கு ரூ.8.87 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகளை திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் அவர்கள் வழங்கினார்.
ஏப்ரல் முதல் 23601-2023 வரையிலான முதல் காலாண்டிற்கான வங்கியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வங்கிகளுக்கான அனைத்து கடனுதவி திட்டங்கள்
மற்றும் மானியம் வழங்கிய விவரங்கள் குறித்து துறைவாரியாக ஆய்வு நடத்தினார்கள். மேலும் ஏப்ரல் முதல் ஜுன்- 2023 வரையிலான காலாண்டில் நிர்ணயிக்கப்பட்ட மற்றும் எய்தப்பட்ட இலக்கு விவரம் குறித்தும், விரிவாக ஆய்வு நடத்தினார்கள்.
இக்கூட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP), பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம் (NEEDS), பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம் (PMFME), அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டங்களின்கீழ் சிறப்பு கடன் வழங்கும் முகாம் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் காமேஸ்வரராவ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) ரமேஷ் குமார், இந்திய ரிசர்வ் வங்கி மேலாளர் விக்னேஷ், மாவட்ட மேலாளர் (நபார்டு வங்கி) மோகன் கார்த்திக், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் செந்தில்குமார், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் முரளீதரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.