அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பாலசுந்தரபுரம், தாதம்பேட்டை, கூத்தங்குடி கிராம மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் ஒன்றிய செயலாளர் உமாதேவி தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாநிலத் தலைவர் வாலண்டினா சிறப்புரையாற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜெயங்கொண்டத்திலிருந்து தா.பழூர், தாதம்பேட்டை வழியாக அடிக்காமலை கிராமத்திற்கு நகர பேருந்து இயக்க வேண்டும். பாலசுந்தரபுரம் கிராமத்தில் சுடுகாட்டுக்கு எரியூட்டும் கொட்டகை அமைக்க வேண்டும் மற்றும் சாலை வசதி, தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.
தா.பழூர் கடைவீதியில் பெண்களுக்கான பொது கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். கூத்தங்குடி காலனி மக்களுக்கு சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சரி செய்து மின்கம்பங்கள் அமைத்து மின் வசதி ஏற்படுத்த வேண்டும். கூத்தங்குடி பள்ளியின் அருகாமையில் மாணவ மாணவிகள் விளையாடுவதற்க்கு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். மூன்று கிராம மக்களும் நெருக்கடியில் வாழ்ந்து வருவதால் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.