Skip to content

டிடிவிவை திவாலானவர் என அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னையை அடுத்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த எஸ்.பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அமமுக பொதுச்செயலரான டிடிவி. தினகரன், அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாகக்கூறி அவருக்குரூ. 31 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை கடந்த 1998-ம் ஆண்டு பிப். 6-ம் தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து அந்நிய செலாவணி ஒழுங்குமுறை மேல்முறையீட்டு வாரியத்தில் டிடிவி. தினகரன் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு கடந்த 2017-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடியாகி விட்டது. ஆனால் இதுநாள் வரை டிடிவி.தினகரன் தனக்கு விதிக்கப்பட்ட ரூ. 31 கோடி அபராதத் தொகையை செலுத்தவில்லை. இந்த தொகையை வசூலிக்க அமலாக்கத்துறை இயக்குநரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே டிடிவி. தினகரனிடமிருந்து ரூ. 31 கோடியை வசூலிக்க அமலாக்கத்துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.  இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.இளையபெருமாள் ஆஜராகி ரூ.31 கோடியை அபராதமாக செலுத்த வேண்டுமென அமலாக்கத்துறை உத்தரவிட்டு 25 ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் இதுவரை அந்த தொகையை அமலாக்கத்துறை வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமலாக்கத்துறை இயக்குநர் பதிலளிக்க மறுத்துவிட்டார் என வாதிட்டார்.  அதற்கு டிடிவி. தினகரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், ‘‘இந்த விவகாரம் தொடர்பாக டிடிவி. தினகரன் சார்பில் கீழமை நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் டிடிவி. தினகரனை திவாலானவர் என அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!