திருச்சி, லால்குடி பெருவளநல்லூரை சேர்ந்தவர் பாலகுமார்( 33). சமையல் கலை நிபுணரான இவருக்கும் இளவரசி என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் சமையல் வேலைக்காக கோவையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு பவித்ரா என்ற பெண்ணும் அதே ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்து உள்ளார். இந்நிலையில் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. தனக்கு திருமணம் ஆனதை மறைத்த பாலகுமார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பவித்ராவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இரண்டாவது மனைவியை அழைத்துக்கொண்டு ரகசியமாக பெருவளநல்லூருக்கு திரும்பி வந்துள்ளார். அங்கே வேறு ஒரு வீட்டில் பவித்ராவை தங்க வைத்து, முதல் மனைவிக்கு தெரியாமல் வாழ்க்கை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் எப்படியோ தனது கணவரின் இரண்டாவது திருமணம் பற்றி கேள்விப்பட்ட முதல் மனைவி இளவரசி இது குறித்து திருச்சி லால்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் பாலகுமார் வெளிநாடு தப்பி சென்றது போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கத்தார் நாட்டுக்கு சென்றுள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து விமான நிலைய இமிகிரேஷனில் இது குறித்து போலீசார் தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் கத்தார் நாட்டில் இருந்து பாலகுமார் திரும்பி வந்துள்ளார். அவர் ஏற்கனவே
தேடப்படும் குற்றவாளி பட்டியலில் இருப்பதால், அவரை பிடித்த திருச்சி விமான நிலைய இமிகிரேஷன் அதிகாரிகள், இது குறித்து லால்குடி மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விமான நிலையம் சென்று அவரை கைது செய்த இன்ஸ்பெக்டர் கார்த்தியகினி, சப்-இன்ஸ்பெக்டர் பார்வதி காவலர்கள் சுஜாதா நந்தினி கலைச்செல்வி ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாலகுமாரை சிறையில் அடைத்துள்ளனர்.