திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
திருச்சியில் எது நடந்தாலும் அது பிரமாண்டமாகத்தான் இருக்கும். சிறிய விழா என்றாலும் அது பெரிய விழாவாக இருக்கும். பெரிய விழா என்றால் அது மாபெரும் மாநாடாக இருக்கும். மாநாடு என்று அறிவித்தால் அது பிரமாண்ட மாநாடாக இருக்கும். அப்படி நடந்தால் அது திருச்சி. அப்படி நடத்தினால் அது கே. என். நேரு.
அந்த புகழை இந்த நிகழ்ச்சி மூலமும் நேரு நிரூபித்து காட்டி உள்ளார். அரசு நிகழ்ச்சி என்று என்னிடத்தில் தேதி வாங்கி அரசு மாநாடாக நடத்தி எழுச்சியுடன் இந்த விழாவை கொண்டாடுகிறார். அவருக்கு என்னுடைய பாராட்டு, வாழ்த்துக்கள்.
அடுத்ததாக மொண்டிப்பட்டியில் தமிழ்நாடு காகித ஆலை 2வது யூனிட் திறப்பு விழாவுக்கு செல்ல இருக்கிறேன்.தமிழ்நாட்டில் தொழில் துறை வேகமாக முன்னேறி வருகிறது. புதிய புதிய தொழிற்சாலைகள் வருகிறது. உலக நாடுகளும் தொழில் தொடங்க தமிழகம் வருகிறது. புதிய துறைகளில் முதலீடுகளை ஈர்த்து உள்ளோம். அதைத்தொடர்ந்து அங்கு சிப்காட் தொழில் வளாகத்தை திறந்து வைக்கிறோம். இந்த துறையில் அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பாக செயல்படுகிறார்.
அடுத்ததாக சன்னாசிப்பட்டியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே ஒன்றாவது பயனாளியை இன்று சந்தித்து அவருக்கு மருந்து பெட்டகத்தை வழங்க இருக்கிறேன். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த திட்டத்தை தொடங்கினோம். அதற்குள் பயனாளிகள் 1 கோடியை தாண்டி விட்டனர்.
வெளியூர் சென்று சிகிச்சை பெற முடியாத நிலையில் உள்ளவர்களின் இல்லம் தேடி சென்று சிகிச்சை அளிக்கும் திட்டம் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம். இது சாதாரண திட்டம் அல்ல. மாரத்தான் போல நெடிய தொடர் ஓட்ட சாதனை திட்டம். அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒரு மாரத்தான் வீரர். அவர் சாலையில் மட்டுமல்ல, தனது துறையிலும் சாதனை ஓட்டம் ஓடுகிறார் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் நேரு, அவருக்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மற்றும் அதிகாரிகளையும் பாராட்டுகிறேன். எனது நண்பர் பொய்யாமொழியின் பெயரை காப்பாற்றும் வகையில் மகேஷ் செயல்பட்டு வருகிறார். பள்ளிக்கல்வித்துறையில் அவர் சிறப்பாக செயல்படுகிறார்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.