தஞ்சை அருகே வல்லம் கோட்டத்திற்கு உட்பட்ட போலீசாருக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு செயல்விளக்க நிகழ்ச்சி நடந்த்து. வல்லம் டிஎஸ்பி நித்யா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், பார்த்திபன், ஜெயந்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
இதில் தஞ்சை தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் குமார், மாவட்ட உதவி அலுவலர் முனியாண்டி, நிலைய அலுவலர் கணேசன், சிறப்பு அலுவலர் பொய்யாமொழி, தீயணைப்பு வீரர்கள் முருகானந்தம், வினோத், சத்யராஜ், விமல், பாலகுமார், குணசேகர் அடங்கிய குழுவினர் தீவிபத்துகளின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்தனர். மேலும்
காஸ் சிலிண்டர் விபத்து, தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்பது போன்றவை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
இதுகுறித்து டி.எஸ்.பி., நித்யா கூறுகையில், கலெக்டர் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேஷன் போன்றவற்றுக்கு வரும் பொதுமக்கள் மண்எண்ணை ஊற்றி தீக்குளிப்போம் என்று மிரட்டல் விடும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதை தடுப்பது குறித்தும் மற்ற தீவிபத்துகளின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதும் குறித்தும் போலீசாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் போலீசார் தங்களுக்கு இருந்த சந்தேகங்களை தீயணைப்பு துறையினரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர் என்றார்.