சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து உதிர்ந்த ஆறு பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாற அந்தக் குழந்தைகளை 6 கார்த்திகை பெண்கள் எடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்தனர். பின்னர் ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்ற கார்த்திகை பெண்களை சிறப்பிக்கும் விதமாக ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் ஆடி மாத கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவது சிறப்பு. அந்த ஆடி கிருத்திகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திருத்தணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் வசதிக்காக அரக்கோணம் – திருத்தணி இடையே சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
இதுபோல தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை விழா விமரிசையாக இன்று நடந்து வருகிறது. பக்தர்கள் விரதம் இருந்து முருகன் கோவில்களில் வேண்டுதல்கள் நிறைவேற வழிபட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் இன்று வயலூர் முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. இதுபோல அறுபடை வீடுகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.