திருச்சியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கவும் மற்றும் மொண்டிப்பட்டி தமிழ்நாடு காகித ஆலை 2வது யூனிட் தொடக்க விழா , இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில்1கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் திருச்சி வந்தார். அவருடன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியும் வந்தார்.
விமான நிலையத்தில் முதல்வருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் நேரு , மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வரவேற்பு முடிந்ததும் முதல்வர் நேராக அண்ணா ஸ்டேடியத்தில் நடக்கும் அரசு விழாவுக்கு வந்தார். வழிநெடுகிலும் மக்கள் பல்லாயிரகணக்கில் திரண்டு நின்று வரவேற்றனர். முதல்வர் வந்த வாகனத்தை பார்த்த பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று வாழ்த்து முழக்கமிட்டனர்.
வரவேற்பை ஏற்றுக்கொண்டு அண்ணா ஸ்டேடியத்துக்கு முதல்வர் வந்தார். அங்கு மகளிர் சுயஉதவிக்குழு அரங்கு அமைக்கப்பட்டிருந்தது அதனை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொடங்கியது.
விழாவுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா வரவேற்றார். முன்னதாக அமைச்சர் நேரு, முதல்வருக்கு வெள்ளி செங்கோலும், அமைச்சர் உதயநிதிக்கு வீரவாளும் நினைவு பரிசாக வழங்கினார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு பேழையில் வெள்ளி பஸ் நினைவு பரிசினை முதல்வருக்கு வழங்கினார்.
விழாவில் 2,764 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 78 கோடி வங்கி கடன் உதவிகளையும், 33 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகளையும்,
8 வங்கிகளுக்கு மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளையும் முதல்வர் வழங்குகிறார். பல்வேறு அரசுத் துறைகளில் சார்பில் ரூபாய் 238.41 கோடி செலவில் 5,635 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கிறார், ரூபாய் 308.29 கோடி மதிப்பிலான 5,931 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 22716 பயனாளிகளுக்கு ரூபாய் 79.06 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரைஆற்றுகிறார்
விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி, மா.சுப்பிரமணியன். எம்.பிக்கள் திருச்சி சிவா, திருநாவுக்கரசர், ஜோதிமணி, மேயர் அன்பழகன், திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.