திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு பகுதியில் நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் பகுதிகள் நேற்று முன்தினம் அதிகாலையில் இடிந்து விழுந்தது. அதனை அடுத்து அந்த கோபுரத்தை புனரமைப்பு செய்வதற்காக 98 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அந்த கோபுரத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவில் ஆணையரிடம் கேட்டறிந்தனர்.
மேலும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு..
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள கிழக்கு வாசல் கோபுரத்தில் நேற்றைக்கு முன்தினம் அதிகாலை சுவர் இடிந்து விழுந்தது. இது குறித்து உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. முதல்வர் அவர்களின் உத்தரையின்படி உடனடியாக சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும், கிழக்கு கோபுரம் ஒரு பகுதி இடிந்து விழுந்ததையடுத்து, NIT பேராசிரியர்கள் கொண்ட குழு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன் அறிக்கை ஓரிரு நாளில் கிடைத்து விடும். அதன்படி கோபுரம் முழுமையாக
மராமத்துப்பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக 2 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது.
அந்த நிதியும் கோயில் நிதியை கொண்டோ அல்லது தனியார் பங்களிப்புடனோ சீரமைப்பு பணிகள் நடைபெறும். அதிகபட்சம் ஓராண்டுக்குள் இந்த பணிகள் முடிக்கப்படும். கிழக்கு கோபுரம் மட்டுமின்றி ஸ்ரீரங்கத்தில் உள்ள, 21 கோபுரங்களிலும் NIT நிபுணர் குழுவை கொண்டு ஆய்வு செய்ய சொல்லி இருக்கிறோம். அதனடிப்படையில் தேவைப்படும்பட்சத்தில் மற்ற கோபுரங்களிலும் சீரமைப்புப் பணிகள் செய்யப்படும்.
ஒரு பணிகள் தொடங்குவதற்கு முன்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். பின்பு அதன் திட்ட அறிக்கையை சரி பார்க்க வேண்டும். அதற்கு பிறகு தான் நிதிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும். குறிப்பாக ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள 21 கோபுரங்களையும் முழுமையாக பராமரிப்பு பணிகள் செய்து முடிக்க ஓராண்டு காலம் ஆகும்.
மேலும் தேவைகள் ஏற்ப கூடுதல் பராமரிப்பு பணிகள் செய்யவும், கோவில் நிர்வாக ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வின்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், நகர பொறியாளர் சிவபாதம், ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் வைத்தியநாதன், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.