மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ மான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தெலங்கானாவை சேர்ந்த கவிஞரும், பாடகருமான கும்மாடி விட்டல் ராவ் என்னும் கத்தார், இதய நோயால் பாதிக்கப்பட்டு, ஹைதராபாத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தச் சூழலில் அவர் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.தனி தெலுங்கானா போராட்டங்களில் முக்கிய பங்காற்றியவர்.
தெலுங்கானாவின் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் ஒருவராகக் கொண்டாடப்பட்டு வந்த கத்தார், தன் புரட்சிகர வரிகள் மூலம் தெலுங்கானா பகுதிகளில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை நாடு முழுவதும் கொண்டு சென்றவர் ஆவார்.
கலை வடிவங்கள் மூலம் மக்களை ஒருங்கிணைக்க முடியும் என்பதையும், அதன் மூலம் கொள்கைகளை மக்கள் மயப்படுத்த முடியும் என்பதையும் தீவிரமாக நம்பியவர்.
தற்போது இயங்கி வரும் பல மக்கள் இசை பாடகர்களுக்கு முன்னோடி இவர் என்றால் அது மிகையல்ல. மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் அவரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.