அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த நிலையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இருதய ஆபரேசன் செய்யப்பட்டது. தற்போது அவர் சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம், அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கூடாது, அவரை கைது செய்தது சரி என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.
இந்த வழக்கில் அமைச்சர் தரப்பில் வழக்கறிஞர்கள் கபில்சிபல், அபிசேக் சிங்வி ஆகியோர் ஆஜரானார்கள். அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்த நிலையில் இன்று காலை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு வருமாறு:
அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 12ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க , அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கிறது
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் இல்லை. கைது செய்யப்பட்ட பிறகு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது.
இவ்வாறு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது.