மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 57.46 அடி. அணைக்கு வினாடிக்கு 3,077 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 9,003 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 22.831 டிஎம்சி. கல்லணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. வெண்ணாற்றில் வினாடிக்கு 5,402 கனஅடியும், கல்லணை கால்வாயில் 1,310 கனஅடியும், கொள்ளிடத்தில் 712 கனஅடியும் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.05 அடியாக இருந்தது.
உச்சநீதிமன்ற தீர்ப்புபடி கடந்த ஜூன், ஜூலை ஆகிய 2 மாதங்களில் மட்டும் தரவேண்டிய மொத்த தண்ணீரில் 30 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம், தமிழகத்திற்கு தரவில்லை. அதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 2 முறை மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் மனு அளித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், பிரதமர் மோடிக்கு இது குறித்து கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் வரும் 11ம் தேதி டில்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் அதன் தலைவர் ஹல்தார் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முக்கியமாக காவிரி நீர் நிலுவை குறித்து தமிழகம் பிரச்னை எழுப்பும் என்பதால் கர்நாடகம் நேற்று முதல் கே. ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு உள்ளது. இன்று காலை நிலவரப்படி தமிழகத்திற்கு வினாடிக்கு 10,340 கனஅடி திறந்து உள்ளது. அநேகமாக 11ம் தேதி வரை கர்நாடகம் இந்த அளவில் தண்ணீர் விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.