பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ராஜ கோபுரம் உள்பட 21 கோபுரங்கள் உள்ளன. இதில் கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும் மேற்கூரை பூச்சுகளும் அதனை தாங்கி நிற்கும் தூண்களும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. அபாயகரமாக உள்ள இந்த கிழக்கு வாசல் கோபுர வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதிகளில் 30 நிமிடங்கள் நல்ல மழை பெய்தது.இதனையடுத்து இன்று அதிகாலை 1.50 மணிக்கு ரெங்கநாதர் கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் சேதமடைந்திருந்த கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும் உள்ள பூச்சுகள் இடிந்து விழுந்தது. நள்ளிரவு நேரத்தில் இடிந்து விழுந்ததால், யாருக்கும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.
இடிந்து விழுந்த கற்கள் மற்றும் பூச்சுகளை அப்புறப்படுத்தும் பணியில் இன்று காலை கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். அதேநேரம், அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுத்தது.
கோபுரம் விரிசல் விட்டிருந்த நிலையில், ஏற்கனவே இந்து முன்னணி சார்பில் கோபுரத்தை சீர் செய்யக்கோரி கோயில் நிர்வாகத்திடம் மனு அளித்தனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று காலை கோயில்
நிர்வாகத்தையும், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்தும், இந்து முன்னணி கோட்டச் செயலாளர் போஜராஜன் தலைமையில் கோயில் இணையாணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகும்படி கூறினர். ஆனால் இணை ஆணையரை பார்த்து விட்டு தான் செல்வோம் என தெரிவித்து போராட்டக்காரர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில் இணையாணையரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அணை ஆணையர் உறுதி அளித்ததை அடுத்து அங்கிருந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் மனோஜ்குமார், சுரேஷ்பாபு மாவட்ட செயலாளர், மணிகண்டன் திருச்சி மாநகர மாவட்ட பேச்சாளர், ராஜா மாவட்ட செயற்குழு உறுப்பினர், மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.