சீனாவில் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையை முன்னிட்டு, ஜப்பான், இந்தியா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகள் சீன பயணிகளிடம் புதிய கொரோனா விதிகளை கடைப்பிடிப்பது என்ற அறிவிப்பை வெளியிட்டன. அமெரிக்காவும் இதுபற்றி பரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளது. இந்த சூழலில், இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் பயணிகளிடம் மேற்கொண்டு வரும் பரவலான பரிசோதனையில், கடந்த டிசம்பர் 24 முதல் 26 வரையிலான 3 நாட்களில் சர்வதேச பயணிகள் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், பிரேசில், கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா, கொரோனா கால தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளது. இதற்காக பல்வேறு மாநில மருத்துவமனைகளில் நேற்று முதல் சோதனை முயற்சி தொடங்கி தொடர்ந்து வருகிறது. டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் மத்திய சுகாதார மந்திரி மாண்டவியா நேற்று நேரிடையாக சென்று ஒத்திகை முயற்சிகளை பார்வையிட்டார். இந்தியாவில், அடுத்த 40 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும். இது ஜனவரி மத்தியில் அதிக பரவலாக மாற கூடும் என மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் இன்று தெரிவித்து உள்ளன. நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு உயர்வின் பகுப்பாய்வு அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், இந்த முறை கொரோனா அலை ஏற்பட்டாலும் அதன் பாதிப்பின் கடுமை குறைவாக இருக்கும். இதேபோன்று உயிரிழப்பு மற்றும் மருத்துவமனையில் சேர்த்தல் ஆகியவையும் மிக குறைவாக காணப்படும் என்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Tags:கொரோனா