திருநெல்வேலி டவுன் காவல் உதவி ஆணையர் சுப்பையா, தனது அலுவலகத்தில் இருந்து திருநெல்வேலி சந்திப்புக்கு போலீஸ் வாகனத்தில் சென்றார். அப்போது நெல்லையப்பர் கோயிலில் இருந்து டவுன் ஆர்ச் வரையிலான ஒரு வழிச்சாலையில் அவரது வாகனம் புகுந்து சென்றுள்ளார் .
அதேவேளையில் திருநெல் வேலி சந்திப்பில் இருந்து டவுனை நோக்கி வந்து கொண்டிருந்த திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் இதை கவனித்துள்ளார்.
உடனடியாக வயர்லெஸ்ஸில் உதவி ஆணையரை தொடர்பு கொண்டு கடிந்து கொண்டார். சாலை விதிகளை போலீசாரே மதிக்காவிட்டால் பொதுமக்கள் எவ்வாறு மதிப்பார்கள்? சட்டம் பொதுமக்களுக்கு மட்டும் தானா, போலீசாருக்கு இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்தோடு ஒரு வழிப்பாதையில் வந்த உதவி ஆணையரின் வாகனத்துக்கு ரூ. 500 அபராதம் விதிக்க போக்குவரத்து ஆய்வாளருக்கு ஆணையிட்டதோடு, அதை உடனடியாக உதவி ஆணையர் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து உதவி ஆணையாளர் ரூ.500 அபராதத்தை செலுத்தியுள்ளார்.
இதனிடையே இந்த விதிமீறலை கண்டுகொள்ளாமல் இருந்ததற்காக, சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸாருக்கும், உதவி ஆணையர் சுப்பையா, அவரது வாகன ஓட்டுநர் ஆகியோருக்கும் மெமோ கொடுக்கப்பட்டது.