தமிழகத்தில் மேல்நிலை கல்வி பயின்று வரும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்வி மாவட்டத்தில் நடப்பாண்டு 11ஆம் வகுப்பு படித்து வரும் 21 ஆயிரத்து 797 மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக நகர்ப்புற நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு 10.58 கோடி ரூபாய் மதிப்புள்ள 21 ஆயிரத்து 797 மிதிவண்டிகளை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “தமிழக முதல்வர் நடப்பு ஆண்டு ரூ.39 ஆயிரம் கோடி கல்வித்துறைக்கு ஒதுக்கி உள்ளார். பள்ளி படிப்பில் மாணவிகளுக்கு இடைநிறுத்தம் ஏற்படக்கூடாது என்பதற்காக உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். மேலும் கல்விக்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். பள்ளிகளில் தற்போது காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வரும் நிலையில் இம்மாதம் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படும். மாணவிகள் நன்கு கல்வி கற்று மேன்மை அடைவதோடு, விளையாட்டு துறையிலும் மாணவ மாணவிகள் பங்கு கொண்டு வெற்றி வாகை சூட வேண்டும்” என்றார்.