நீலகிரி மாவட்டம் முதுமலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகையையொட்டி வனத்துறையினர் தங்கும் சுற்றுலா விடுதிகள் மூடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், தாயைப் பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மியை பராமரித்து வந்த பழங்குடி தம்பதியினர் பொம்மன், பெள்ளி இடையேயான பாச உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட எலிபென்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண படத்துக்கு, ஆஸ்கர் விருது கிடைத்தது. இதன் மூலம் யானை குட்டிகள், பாகன் தம்பதி உலகப் புகழ் பெற்றுள்ளனர். இதனிடையே பாகன் தம்பதியை சந்திக்க ஆகஸ்ட் 5ம் தேதி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் வருகிறார்.
அவரை வரவேற்க, பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, 6 நாட்களுக்கு தெப்பக்காடு யானைகள் முகாம் தற்காலிகமாக மூடப்படுவதாகத் தெரிவித்தனர். இந்நிலையில், குடியரசுத் தலைவர் வருகையையொட்டி வனத்துறையினரின் தங்கும் விடுதிகள் மூடப்பட்டன. முதுமலையில் உள்ள வனத்துறை சுற்றுலா தங்கும் விடுதிகள் இன்று முதல் 5ம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கான வாகன சவாரி நாளைமுதல் நிறுத்தப்பட வாய்ப்பு எனவும் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.