மனித வாழக்கைக்கு நம்பிக்கையும், யானைகளுக்கு தும்பிக்கையும் அவசியம். ஆனால் கேரள மாநிலத்தில் ஒரு யானை தும்பிக்கை இல்லாமல் போராட்டத்துடன் வாழ்ந்து வருகிறது. கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஏழாட்டுமுகம் வனப்பகுதியில் 4 வயது மதிக்கத்தக்க குட்டியானை ஒன்று கடந்த சில மாதங்களாக திரிந்து வருகிறது. அந்த குட்டி யானைக்கு துப்பிக்கை இல்லை. அந்த குட்டி யானையை 4 முறை பொதுமக்கள் பார்த்துள்ளனர். ஆனால் இதற்கு முன் பார்த்ததைவிட, தற்போது அந்த யானை மிகவும் சோர்வான நிலையில் திரிவதாக கூறப்படுகிறது.
யானைக்குட்டிகளுக்கு 5 முதல் 6 வயது வரை அதன் தாய் பாலூட்டும். ஆனால் இந்த யானை தாயிடம் இருந்து பிரிந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த யானைக்கு தும்பிக்கை இல்லாமல் இருப்பதால் மற்ற யானைகளை போன்று அனைத்து உணவுகளையும் வழக்கம்போல் உண்ண முடியாத நிலையில் இருக்கலாம் எனவும், அதன் காரணமாக அந்த யானை உடல்நிலை மோசமடைந்து சோர்வாக காணப்படுகிறது என்றும் யானை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் அந்த குட்டி யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க வனத்துறையினர் முன்வர வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.