கோவை, செஞ்சிலுவை சங்கம் அருகே வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக அமமுக -அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் கொடநாடு கொலை,கொள்ளை வழக்கை துரிதமாக நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இரு அமைப்புகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்த தொண்டர்கள் சிலர்,
கொடநாடு உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என உடலில் கருப்பு சாயம் பூசி , அதில் வெள்ள எழுத்துகளில் எழுதி வந்தனர்.அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் அமர வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது கொடநாடு வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பபட்டது.ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் ஓபிஎஸ் ஆதரவாளர் அழகு மருதுராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது திமுக தலைவர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடநாடு விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சொன்னார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 90 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.வாயால் மட்டும் சொல்லவில்லை, திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் சொல்லப்பட்டது , ஆனால் இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது, விசாரணை மாறுகின்றதே தவிர விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவித்தார்.நியூஸ் 18 தொலைக்காட்சி கொடநாடு வழக்கு குறித்து புலனாய்வு செய்தியை ஒளிபரப்பியது.
அதில் குற்றவாளிகளை கேரளாவில் சந்தித்த போது எங்களை சந்தித்து ஒரு நபர் பேரம் பேசினார் , காரிலே வந்து பணம் தந்தார் என்று அவர்கள் சொன்னார்கள் எனவும், பல புகைப்படங்களை காட்டிய பொழுதும் மறுத்த அவர்கள், சேலம் இளங்கோவின்
புகைப்படத்தை காட்டிய பொழுது அவர்தான் தங்களை சந்தித்தாக குற்றவாளிகள் சொன்னார்கள் எனவும், அப்படிச் சொல்லப்பட்ட 20 நாட்களில் சேலம் இளங்கோவனுக்கு அதிமுக மாவட்ட செயலாளர் பதவி, எடப்பாடி வகித்து வந்த அந்த பதவி கொடுக்கப்பட்டது என தெரிவித்தார்.
இதே போல சஜீவன் என்பவருக்கு அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது எனவும், இவை அனைத்தையும் ஒன்றாக , எல்லா பக்கமும் பார்த்தால் சந்தேகம் எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி வருகிறது எனவும் தெரிவித்தார்.
கொடநாடு குறித்து தேர்தல் வாக்குறுதி கொடுத்து 2.5 வருடங்கள் ஆகிவிட்டது, ஏன் இது வரை குற்றவாளிகளை தண்டிக்கவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி ஒரு முறை கூட தன் வாயை திறந்து இது வரை திமுக அரசை கேட்கவில்லை எனவும்,அதிமுக சார்பில் 14 முறை திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
ஆனால் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்கவேண்டும் என ஏன் அதிமுக கேட்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.எடப்பாடியுடன் இருப்பவர்கள் கொடநாடு என்ற பெயரை சொல்வது இல்லை எனக்கூறிய அவர்,
நாங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் தமிழக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் எனவும்,அதிமுக கைது செய்தவர்களை திமுக பிணையில் எடுக்கின்றது எனவும், மொத்த விபரங்களையும் திமுக தெரிந்துகொண்டு, எடப்பாடியை பிணைகைதியாக, அரசியல் ரீதியாக வைத்துக்கொண்டு உள்ளடி வேலை பார்க்கின்றது எனவும் அழகு மருதுராஜ் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் போலீஸ் ஸ்டேசனில் அமர வைக்கப்பட்ட கருப்பு பெயிண்ட் அடித்து வந்த 4 பேரையும் போலீசார் விடுவித்தனர்.