திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நேரு. இவருடைய மகன் தூர்வாசலு (வயது 21). இவர் திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சரத்குமார் (23). இவரும் திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் பி.சி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கல்லூரி நண்பர்களுடன் சந்தோஷமாக கொண்டாட தூர்வாசலு முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக நேற்று கல்லூரிக்கு சென்ற தூர்வாசலு, சரத்குமார் ஆகிய இருவரும் மதியம் கல்லூரியில் இருந்து வெளியேறி தனது நண்பருடைய மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை தூர்வாசலு ஓட்டி சென்றுள்ளார். அப்போது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பனப்பாக்கம் கூட்டுச்சாலை அருகே முன்னே சென்ற லாரியை தூர்வாசலு முந்திச்செல்ல முயன்று உள்ளார். அப்போது எதிர்திசையில் திருத்தணியை நோக்கி வந்து கொண்டிருந்த கார் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி மாணவர்கள் தூர்வாசலு, சரத்குமார் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் படுகாயம் அடைந்த தூர்வாசலு சம்பவ இடத்திலேயே பலியானார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சரத்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரத்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த கனகம்மாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை கல்லூரி மாணவர்கள் 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். கார், மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் மாம்பாக்கம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வஞ்சிவாக்கம் கிராமத்தில் வசிப்பவர் சுரேஷ் (46). இவரது உறவினர் மீஞ்சூர் அடுத்த தேவதானம் மேட்டு காலனியை சேர்ந்த எழிலரசன் (30). இவர் மீஞ்சூர்-காட்டூர் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வஞ்சிவாக்கம் கிராமம் அருகே சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே எழிலரசன் பலியானார். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல், விழுப்புரம் மாவட்டம் கடனூர் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (65). இவர் நேற்று முன்தினம் மாலை மணவாளநகர் சந்திப்பு அருகே தண்டபாணி சாலையில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.