தமிழகத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது திருச்சி. இங்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளனர். திருச்சியில் விமான நிலையம் இருப்பதால் பக்கத்து மாவட்டங்களுக்கு செல்லும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் திருச்சி வந்து செல்கிறார்கள்.
தமிழக அரசின் திட்டங்கள், அமைச்சர்களின் நிகழ்ச்சி விவரங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு தெரிவிப்பதற்காக செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள் மாவட்டந்தோறும் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.
திருச்சி மத்திய மாவட்டம் என்பதால் இங்கு செய்தித்துறை உதவி இயக்குர் பணியில் இருப்பார். இந்த பதவியில் இருந்த உதவி இயக்குனர் செந்தில்குமார் என்பவர் பதவி உயர்வு பெற்று சென்னை சென்று விட்டார். அதன்பிறகு மதுரையை சேர்ந்த சாலி தளபதி என்பவர் திருச்சி செய்தி மக்கள் தொடர்புத்துறை உதவி இயக்குனராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் இங்கு பணிக்கு வரவில்லை. எனவே 2 மாதமாக அந்த பணியிடம் காலியாகவே உள்ள நிலையில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி சுதாகர் என்பவர் தான் அந்த பணியை கவனித்து வருகிறார்.
அவரிடம் செய்தியாளர்கள் ஏதாவது ஒரு தகவல் கேட்டால், தெரியாது என்ற பதில் தான் எப்போதும் வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் உள்ள ஒரு உயர் அதிகாரியை தொடர்பு கொள்ள போன் நம்பர் கேட்டால், இப்போது பிசியாக இருக்கிறேன், பிறகு பேசுங்கள் என்கிறார். எப்போது தான் திருச்சிக்கு ஒரு மக்கள் தொடர்பு அதிகாரி அல்லது உதவி இயக்குனரை அரசு நியமிக்க போகிறதோ என்ற ஆதங்கத்தில் பத்திரிகையாளர்கள் உள்ளனர்.