திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள அரியனாம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ் (43). இவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (35). இவர் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதியின் மகன் ஹேமேஷ் (8), அரியனாம்பேட்டை தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான்.
மஞ்சுளாவிற்கு சிறிது மனநிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் ஊர்க்காவல் படை பணிக்கு செல்லாமல் இருந்தார். மேலும் லால்குடி அருகே தாளக்குடியில் உள்ள அவரது தாய் அன்னக்கிளி வீட்டில் கடந்த ஒரு மாதமாக அவர் தங்கியிருந்து, திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த வியாழக்கிழமை மஞ்சுளா தனது தாய் வீட்டில் இருந்து யாரிடமும் சொல்லாமல், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க அரியனாம்பேட்டைக்கு வந்துள்ளார். இதையடுத்து மஞ்சுளாவை தேடிக்கொண்டு அவரது தாய் அன்னக்கிளி அங்கு வந்துள்ளார்.
பின்னர் மஞ்சுளாவை மீண்டும் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு வருமாறு அன்னக்கிளி நேற்று முன்தினம் அழைத்துள்ளார். அப்போது மஞ்சுளா, தனது தாயுடனும், மாமியார், மாமனாருடனும் தகராறு செய்து சிகிச்சைக்கு செல்ல மறுத்ததாக தெரிகிறது. இதனால் தாய்க்கும், மகளுக்கும் இடையே அன்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் வீட்டில் தூங்கியுள்ளனர்.
நேற்று அதிகாலை எழுந்த அன்னக்கிளி, வீட்டில் கிடந்த கல்லை எடுத்து மஞ்சுளாவின் தலை மீது போட்டுள்ளார். இதில் தலை சிதைந்து ரத்த வெள்ளத்தில் மஞ்சுளா துடிதுடித்து இறந்தார். இதைத்தொடர்ந்து அன்னக்கிளி (55) தொட்டியம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின், தொட்டியம் இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொட்டியம் போலீசார் வழக்குப்பதிந்து, அன்னக்கிளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.