Skip to content
Home » அப்பர் கோதையாறு வனப்பகுதியில் யானைக்கூட்டத்துடன் இணைந்தது அரிசிக்கொம்பன்…

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் யானைக்கூட்டத்துடன் இணைந்தது அரிசிக்கொம்பன்…

கேரளா மாநிலம் இடுக்கியில் உள்ள சின்னக்கனால் வனப்பகுதியில்  யானை ஒன்று பெரும் அட்டகாசம் செய்து வந்தது. 35 வயதுள்ள இந்த யானை ரேஷன்கடைகளை உடைத்து அரிசியை சாப்பிட்டதால் இதனை கேரளாவில் ‘அரிக்கொம்பன்’ என்று அழைத்து வந்தனர். இந்த யானையின் தாக்குதலில் சிக்கி ஏழு பேர் வரை கொல்லப்பட்டதாகவும், 75க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் யானையால் தகர்க்கப்பட்டதாகவும் வன்துறையால் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் பொதுமக்கள் தரப்பில் இந்த எண்ணிக்கை குறைவு என்றும், அரிசி கொம்பன் தாக்குதலில் 2017 முதல் இதுவரை 12 பேர் வரை பலியாகியுள்ளனர். பல நூறு ஏக்கர் விளைநிலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. 180க்கும் மேற்பட்ட கட்டிடங்களை யானை தகர்த்துள்ளது என்றும் கூறுகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி மயக்க ஊசி போடப்பட்ட நிலையில் காடு கடத்தப்பட்ட அரிசி கொம்பன் தமிழ்நாடு கொண்டுவரப்பட்டு பெரியாறு புலிகள் காப்பகத்தில் முல்லைக்கொடி வனப்பகுதியில் விடப்பட்டது. இதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. அந்த பகுதியில் குடியிருப்புகளில் புகுந்து அரிசி கொம்பன் தொல்லை கொடுத்தால், வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் யானையை விரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டனர். ஆனால் அது பலன் கொடுக்கவில்லை. பின்னர் கம்பம் பகுதியில் சுற்றத்திரிந்த அரிசி கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்து லாரியில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வனப்பகுதிக்கு லாரியில் கொண்டுவரப்பட்டு அங்குள்ள அப்பர் கோதையாறு வனப்பகுதியில் ஜூன் மாதம் 5ம் தேதி விடப்பட்டது. வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் முகாமிட்டு யானையை கண்காணித்து வந்தனர். கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி தொடங்கி அப்பர் கோதையாறு வனப்பகுதியில் யானை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. கோதையாறு அணை பகுதியில் இறங்கி தண்ணீர் குடிப்பது, வனப்பகுதியில் புற்களை உண்டு மகிழ்வது, மண்ணை வாரி உடலில் பூசிக்கொள்வது என்று யானை மகிழ்ச்சியுடன் இருப்பதாக வனத்துறை அவ்வப்போது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வந்தனர். இந்தநிலையில் கேரளாவில் இருந்து அரிசி கொம்பன் யானை தமிழக வனப்பகுதிக்கு வந்து 4 மாதங்கள் ஆகிறது. தற்போது வனத்துறையினர் எதிர்பார்த்தது போன்று 2 குட்டி யானைகள் உட்பட 10 யானை கூட்டங்களுடன் அரிசி கொம்பன் யானையும் சேர்ந்து உலா வருகிறது. யானை கூட்டத்துடன் இணைந்து விட்டதால் அரிசி கொம்பன் யானையை கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்த வனத்துறையினர் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ரேடியோ காலர் சிக்னல்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் யானையின் நடமாட்டம் தொடர்ந்து துல்லியமாக கண்டறியப்பட்டு வருகிறது. யானை கூட்டத்துடன் இணைந்துவிட்டதால் அதனுடன் இணைந்து அரிசிக்கொம்பன் பயணப்பட வாய்ப்பு உள்ளது என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!