தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சீதாராமன் (35). இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரும், அதே வங்கியில் திருச்சி கிளையில் பணியாற்றும் விக்னேஷ் என்பவரும் கோயம்புத்தூரில் வங்கி நடத்திய மீட்டிங் சென்று விட்டு மீண்டும் காரில் தஞ்சாவூர் நோக்கி வந்துள்ளனர்.
திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கே.பேட்டை என்ற இடத்தில் வந்தபோது முன்னாள் சென்ற அரசு பேருந்தை முந்த முயன்றதில் எதிர்பாராத விதமாக எதிரே சவுக்கு லோடு ஏற்றி வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரை ஓட்டி வந்த சீதாராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார். உடன் வந்த விக்னேஷ் பலத்த காயங்களுடன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருந்த சீதாராமன் உடலை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரியும் காரும் மோதிக்கொண்ட விபத்தினால் சாலையின் இருபுறத்திலும் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு 1 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் இறந்த சீதாராமனின் நிறைமாத கர்ப்பிணி மனைவி பிரசவத்திற்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.