விவசாயிகள் தயார் செய்யும் அச்சுவெல்லத்தை விற்பனை செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக வேளாண் வணிகத்துறை மூலம் வாரந்தோறும் பாபநாசத்தில் விவசாயிகள் முன்னிலையில் அச்சு வெல்லம் ஏலம் விட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை அச்சு வெல்லம் தயாரிக்கும் விவசாயிகள் வரவேற்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, அய்யம்பேட்டை, பாபநாசம் உள்ளிட்டப் பகுதிகளில் அச்சுவெல்லம் தயாரிக்க, அதற்கான கரும்பை விவசாயிகள் நிகழாண்டு சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்துள்ளனர். பாபநாசம், திருவையாறு பகுதியில் உள்ள அச்சுவெல்லம் தயார் செய்யும் விவசாயிகள் வாரந்தோறும் வியாழக்கிழமையில் ஏலத்தில் பங்கேற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு, ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தாட்சாயிணி முன்னிலையில் அச்சுவெல்லம் தொடர்பாக, விவசாயிகள், வியாபாரிகள், அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
இதில் வியாழக்கிழமை தோறும் விவசாயிகள் முன்னிலையில் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண் வணிகத்துறையினர் கூறுகையில்….தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏற்கெனவே பருத்தி, உளுந்து, பயறு உள்ளிட்ட தானியங்கள் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்போது வாரந்தோறும் பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் அச்சுவெல்லம் ஏலம் விடப்பட உள்ளது. இதில் வியாபாரிகள் அதிகளவில் பங்கேற்க இருப்பதால் விவசாயிகளுக்கு கூடுதலானத் தொகை, ஏலம் மூலம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதே போல் விவசாயிகள் அதிகளவில் அச்சு வெல்லத்தை கொண்டு வந்து பயன் அடைய வேண்டும். தமிழகத்தில் முதன்முறையாக அச்சுவெல்லம் ஏலம் பாபநாசத்தில் மட்டுமே விடப்படுகிறது என்றனர்.