சென்னை கொரட்டூர் பகுதியில் காவல்நிலையம் அருகே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு, விற்கப்பட்ட ‘கோல்டன் 222 பிளாட்ஸ்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. 9 அடுக்குகள் கொண்ட இந்த குடியிருப்பில் மொத்தம் 180 வீடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 1.00 மணி அளவில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 20 வினாடிகள் கட்டிடங்கள் குலுங்குவது போல் உணர்ந்ததாக தெரிகிறது. இதனையடுத்து பீதியடைந்த குடியிருப்புவாசிகள் உடனடியாக தங்களது குடும்பத்தினருடன் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.
மேலும் தகவலின்பேரில் உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு எந்தவொரு அதிகாரப்பூர்வ நிலநடுக்கமும் பதிவாகவில்லை என்று தெரிவித்தனர். மேலும் கட்டிடத்தின் கட்டுமான குறைபாடுகள் குறித்த புகார்களை வீட்டுவசதி வாரியத் துறையினரிடம் முறையிடுமாறு கேட்டுக்கொண்ட அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். குடியிருப்புக் கட்டிடங்கள் வழங்கப்பட்ட 2 மாதங்களுக்குள்ளாகவே சில இடங்களில் விரிசல் ஏற்பட்டதாகவும், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தபோது விரிசல் மட்டுமே சரிசெய்யப்பட்டதாகவும், இந்த பணிகளில் தங்களுக்கு திருப்தி இல்லை எனவும் குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.