திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்,துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மு.மதிவாணன் , துர்காதேவி ,ஜெய நிர்மலா , விஜயலட்சுமி கண்ணன்,மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 98 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அதனைத்தொடர்ந்து மாநகரில் குடிநீர் பிரச்சினை இருப்பதாக சில கவுன்சிலர்கள் தெரிவித்தனர். 57 வது வார்டு திமுக கவுன்சிலர் முத்துச்செல்வம் பேசுகையில், பட்ஜெட்டில் வார்டுக்கு ஒரு கோடிக்கு
வளர்ச்சி பணிகள் நடைபெறும் என்று அறிவித்து இருந்தீர்கள்? அது எப்போது அமலுக்கு வரும்? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து மேயர் அன்பழகன் பேசுகையில்,கவுன்சிலர்களுக்கான அலுவலகம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. அடுத்த கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
47 வது வார்டு அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன் பேசுகையில்,
தூய்மை பணியாளர்களுக்கு ரூ 525 க்கு பதிலாக 500 ரூபாய் தான் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இது கண்டனத்திற்குரியது. இதேபோல் திருச்சியில் ஒரு கல்லூரிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஏற்புடையது அல்ல என்றார்.
இவ்வாறு ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர்களும் பல்வேறு விவாதங்களை முன்வைத்து பேசினார் . அப்போது 43-வது தீர்மானத்தை ஒத்தி வைக்குமாறு திமுக கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தினர். ஆனால் ஒரு மனதாக அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை கண்டித்து மாநகராட்சி கூட்டம் முடிந்த பிறகும் இரண்டு திமுக கவுன்சிலர்களும் மாநகராட்சி கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களுக்கு ஆதரவாக அமமுக கவுன்சிலர் செந்தில்நாதனும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.