என்.எல்.சி. நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. வளையமாதேவியில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் அறுவடை செய்ய இருக்கும் நெற்பயிர்கள் உள்ள இடத்தில் ஜே.சி.பி. இறங்கி கால்வாய் அமைக்கும் பணியை செய்தது. நெற்பயிர்கள் அழிக்கப்படுவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நெய்வேலியில் என்எல்சியின் அத்துமீறல் கண்டித்து இன்று பா.ம.க. முற்றுகை போராட்டம் அறிவித்தது. பாமக தலைவர் அன்புமணி தலைமையில் இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் இன்று காலை முதல் அங்கு பாமக தொண்டர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பல்லாயிரகணக்கில் திரண்டனர். அவர்கள் அன்புமணி தலைமையில் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. வழக்கறிஞர் பாலு மற்றும் பாமக முன்னணியினர் இதில் பங்கேற்று உள்ளனர். போராட்டத்தின் நோக்கம் குறித்து அன்புமணி, பாலு உள்ளிட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர்.
போராட்டம் நடத்தியவர்கள் என்எல்சி அலுவலகத்தை நோக்கி மேலும் முன்னேறியதால் போராட்டத்தை தடுத்து நிறுத்த போலீசார் அன்புமணியை கைது செய்து போலீஸ் பஸ்சில் ஏற்றினர். இதனால் தொண்டர்கள் ஆத்திரமடைந்து போலீசார் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்கினர். கொடிகம்பங்களாலும் தாங்கினர். போலீஸ் வாகனங்களையும் அடித்து உடைத்தனர். இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட போலீசார் ரத்த காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். அதன் பிறகும் தொண்டர்கள் கட்டுக்குள் வராததால் போலீசார் தடியடி நடத்தினர். வஜ்ரா வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் தொண்டர்கள் கலைந்து ஓடினர். அன்புமணியை கைது செய்யக்கூடாது, விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொண்டர்கள் இந்த வன்முறையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த பகுதி போர்க்களமானது. சாலைகள் முழுவதும் கற்களாக கிடந்தது. ஏற்கனவே 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு மேலும் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இன்று என்எல்சி சார்பில் நடைபெற இருந்த கால்வாய் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. பாதுகாப்புக்கு போலீசார் வராததால் இன்று பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நெய்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள 10 கி.மீ. பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாமக போராட்டம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று மாலை 6 மணிவரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது.