மயிலாடுதுறை அருகே அச்சுதராயபுரத்தில் நேற்று மூங்கில் மரத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நான்கு குடிசை வீடுகள் முழுமையாகவும் இரண்டு வீடுகள் பகுதியாகவும் தீக்கிரையாகின. இந்த விபத்தில் சாந்தி என்பவரின் வீட்டில் கட்டி இருந்த 3 ஆடுகளும் கருகி உயிரிழந்தன. தீயணைப்புத் துறையின் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருள்கள் சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த பூம்புகார் எம்ல்ஏ நிவேதா முருகன் சம்பவ இடத்திற்கு வந்து தீவிபத்தில் எரிந்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு வீட்டு உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறி வீட்டிற்கு தலா ரூபாய் 5 ஆயிரம் நிவாரண உதவித்தொகையுடன் மளிகை பொருட்கள், காய்கறிகள் உடைகள் வழங்கினார்.
அப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் கதறி அழுதனர். ஒவ்வொரு பொருளாக பார்த்து பார்த்து வாங்கி வைத்தேனே என் மகள் திருமணத்திற்கு வாங்கி வைத்த நகைகள் அனைத்தும் கருகிவிட்டதே என்ன செய்வேன் என்று கதறி அழுத பெண்ணின் கண்ணீர் அனைவரையும் கலங்க செய்தது. மேலும் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கண்ணீருடன் வேதனை தெரிவித்த பெண்களுக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ஆறுதல் கூறினார். இதில் ஒன்றியக்குழு தலைவர் காமாட்சிமூர்த்தி, திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகுமணி மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.