மதுரையில் இயங்கி வந்த நியோமேக்ஸ் (Niomax properties private limited) என்ற தனியார் நிதி நிறுவனம் பன்மடங்கு வட்டி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில் இந்நிறுவனத்தின் கிளை இயக்குநர்கள் சைமன் ராஜா, கபில், இசக்கிமுத்து, சகாயராஜா ஆகிய 4 பேர் இதுவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிக வட்டி தருவதாக, 3000 கோடி ரூபாய் சுருட்டிய, ‘நியோமேக்ஸ்’ நிதி நிறுவன கும்பல் மோசடி செய்துள்ளனர். இந்நிறுவன இயக்குனர்களான வீரசக்தி, பாலசுப்பிரமணியம், கமலக்கண்ணன் மூவரும் தலைமறைவாக உள்ளனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்கான சிறப்பு முகாம் கடந்த சனியன்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. அதில் புதுக்கோட்டை, காரைக்குடி, பெரம்பலூர், திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த சிறப்பு முகாமில் 35க்கும் மேற்பட்டோர் புகாரளித்த நிலையில், இதுவரை மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்டோர் 21 கோடியே 80 லட்சம் ரூபாயை இழந்துள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். தற்போது இந்த நிறுவனத்தின் திருச்சி, மதுரை கிளைகளை நிர்வகித்து வந்த மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த பத்மநாபன் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.