சென்னை, திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு அங்குப் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை அளித்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சம்மந்தப்பட்ட ஆசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தியும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரை கலாஷேத்ரா கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவி ஒருவர் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பேராசிரியர் ஹரிபத்மன் மீது புகாரளித்திருந்தார். மேலும் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து மகளிர் ஆணையமும் கலாஷேத்ரா மாணவர்களிடம் விசாரணை செய்தது.
முன்னாள் மாணவி அளித்த புகாரின்பேரில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து போலீசார் அவரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் ஹரிபத்மனுக்கு ஜாமீன் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், 50-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 250 பக்க குற்றப்பத்திரிக்கையய் தாக்கல் செய்தனர்.