தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் 80- க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவித்தனர். வீரபத்ரவரம் கிராமத்தின் புறநகர் பகுதியில் உள்ள முத்தியாலதாரா அருவியை பார்வையிடுவதற்காக புதன்கிழமை காலை சுற்றுலா பயணிகள் சென்றனர். மாலையில் சுற்றுலா பயணிகள் திரும்பும் போது, வழித்தடத்தில் உள்ள ஓடை நிரம்பி வழிந்தது. ஓடை நிரம்பியதால் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வரமுடியாமல் சிக்கி கொண்டனர்.
சுமார் 50 முதல் 70 சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளதாக கிராம மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, அதிகாரிகள் சுற்றுலா பயணிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தனர். எஸ்பி கவுஷ் ஆலம் தலைமையில் 6 தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். சிக்கியுள்ள சுற்றுலா பயணிகளிடம் போனில் பேசிய அதிகாரிகள் எந்த சூழ்நிலையிலும் ஓடையை கடக்க முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தினர். மீட்பு குழுவினர் வரும் வரை உயரமான இடத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நீண்ட போராட்டத்துக்கு பின்னர் அங்கு சென்ற தேசிய பேரிடர் மீட்புப்படையினர், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.