திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் வேளாண் சங்கமம் 2023 விழா இன்று காலை தொடங்கியது. இதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து, அங்குள்ள அரங்குகளை பார்வையிட்டார். விழாவில் அமைச்சர்கள் கே. என். நேரு, பன்னீர்செல்வம், மகேஷ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அங்கு நடந்த விழாவில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
மற்ற துறைகளைப்போல வேளாண் துறையை நினைத்தவுடன் முன்னேற்றி விட முடியாது. மற்ற துறைகளை முன்னேற்ற நிதி இருந்தால் போதும். ஆனால் வேளாண் துறையை முன்னேற்ற நிதியுடன் நீர் வளமும் இருக்க வேண்டும். அதுவும் காலத்தே இருக்க வேண்டும். இடுபொருட்கள் தேவையான அளவு வழங்கப்பட வேண்டும். கடந்த 2 வருடங்களாக திமுக அரசு காலத்தே அவற்றை
வழங்கியது. இதனால் மண்ணும் ஈரமானது. மக்கள் உள்ளமும் ஈரமானது.
திமுக அரசு பதவியேற்றதும் வேளாண்மைத்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2021-22ம் ஆண்டில் 119.97 லட்சம் டன் உணவு தானியம் உற்பத்தி செய்தோம். 2022ல் 5.36 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்தோம். கடந்த 47 ஆண்டுகிளல் இல்லாத அளவுக்கு சாகுபடி பரப்பை உயர்த்தி, சாதனை அளவை எட்டி உள்ளோம்.
2 ஆண்டுகளில் 1.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினோம். அதன் தொடர்ச்சியாக இப்போது 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இந்த விழாவில் இலவச மின்சாரம் வழங்குகிறோம். இதற்கு மின் 10 ஆண்டுகள் இருந்த ஆட்சி மொத்தமே 2.2 லட்சம் விவசாயிகளுக்கு தான் இலவச மின்சாரம் வழங்கியது. நாங்கள் இப்போதே 2 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கி இருக்கிறோம்.
கலைஞர் ஆட்சியில் தான் முதன் முதலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தோம். இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தப்படுவது மிகவும் அவசியம். நவீன தொழில் நுட்பங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். நேற்று நான் திருச்சி வந்தபோது ஒரு பத்திரிகை செய்தியை பார்த்தேன். குறுவை தொகுப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி இந்த மாத இறுதியுடன் முடிகிறது. அதை நீட்டித்து தர வேண்டும் என அதில் விவசாயிகள் கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்பட்டு இருந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, குறுவை தொகுப்பு திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் தேதி ஆகஸ்ட் 15 வரை நீடிக்கப்படுகிறது என்று இவ்வாறு அவர் கூறினார்.